Volunteering at Cuckoo Forest School, Feb 4-5 2017

Write-up by Thanga Sami
                    குக்கூ
Inline image 1
பெயரைப் போலவே அந்த இடமும் கவிதையாகத்தான் இருந்தது.  அந்த இடத்தில் இருந்தவர்களும் பெரிதும் அதிர்ந்து பேசுவதில்லை. தொலைநோக்குடைய சில நண்பர்களால் குக்கூ இயக்கம் 2004 ல் ஆரம்பிக்கப்பட்டது. “தொலைநோக்கு” என்பதை சற்று தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், எங்களுக்குள் நடந்த சில உரையாடல்களை சொல்லலாம். இதன் மூலம் அங்கு இருப்பவர்கள் எத்தகைய மனிதர்கள் என்று நீங்கள் புரிந்து கொள்ள முடியும். 
———————————————————————————-
1 .
அந்த காலத்துலல்லாம், விவசாயம் செய்யுறப்ப சில பாத்திகளை பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் ஒதுக்கி வச்சிருப்பாங்க. அந்த இடத்தை அறுவடை பண்ண மாட்டாங்க. பறவைகளும், காட்டு மிருகங்களும் மேஞ்சிட்டு போட்டும்னு விட்டுருவாங்க. அந்த அளவுக்கு இயற்கை சமநிலைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார்கள். இப்ப பணம்தான் எல்லாம். பணத்துக்கு ஆசைப்பட்டு ஹைபிரிட் தாவரத்தை பயிர் செய்யுறாங்க. நல்ல நாட்டு வாழைப்பழத்தை பார்க்க முடியல. கோதுமையும், நெல்லையும் தவிர வேறு தானியங்கள் இல்லைன்னு நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க. 
2 .
“மெரினாவில் எண்ணெய் கசிவினால் ஆமையும், மீனும் செத்து கிடக்கிறதை பார்க்கும்போது பாவமாக இருக்குது. ஏதாவது பண்ணனும்.”
‘இதுல நீங்க பாவப்படுறதுக்கு ஒண்ணுமில்ல. மனிதனின் தேவைதான் எல்லாத்துக்கும் காரணம். இந்த விஷயம் உங்களுக்கு தெரிஞ்சதுனால, போட்டோவா பார்த்ததுனால பாவப்படுறீங்க. ஆனா உங்க கண்ணுக்கு தெரியாம நாம டன் கணக்குல குப்பையை கடலுல சேர்த்துக்கிட்டுதான் இருக்கோம். அதுனால லட்சக்கணக்கான உயிரினங்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கு. நாம எதாவது இயற்கைக்கு நல்லது பண்ணனும்னு நினைச்சா, தேவைகளை குறைச்சு வாழறதும், மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்குறதும்தான் ஒரே வழியாக இருக்க முடியும்.’
3 .
“விஞ்ஞானத்துல வளர்ந்த நாடு எல்லாம் புல்லட் ட்ரெயின் விடுறாங்க. நாம இன்னும் பழசையே புடிச்சு தொங்கிட்டு இருக்கிறது தப்பில்லையா?”
‘நாங்க விஞ்ஞானத்தை குறை சொல்லவில்லை. விஞ்ஞானத்தை விட இயற்கை ரொம்ப முக்கியம்னு நினைக்கிறோம். நீங்க ஐந்து நட்சத்திர ஓட்டல் வசதியோடு மெத்தைல தூங்க விரும்புகிறீர்களா, இல்லை கயித்து கட்டில்ல ஆயிரமாயிரம் நட்சத்திரத்தை பார்த்து கொண்டு தூங்க விரும்புகிறீர்களா என்பது உங்களுடைய விருப்பம். 
—————————————————————————-
இதுபோக, அந்த இடத்தில் இரண்டு நாட்கள் கற்று கொண்டது மிக அதிகம். யானை, புலி, மச்சலியோட பெருமை, இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், காடு, மரம் என பல விஷயங்கள் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருந்தது. 
இத்தகைய விஷயங்கள் கூகுலில் இருப்பதில்லை. குக்கூ காட்டு பள்ளி பல வகையில் தனித்துவமானது. அதில் சிலவற்றை கீழே எழுதியுள்ளேன்.
Inline image 2
1 . நூலகம் 
 
குக்கூவின் முதல் சிறப்பம்சம் அங்குள்ள நூலகம். எந்த ஒரு விஷயத்தைப்பற்றியும், இவர்களால் ஆழமாக பேச முடிகிறது என்றால், அதற்க்கு இங்குள்ள நூலகம் முக்கிய காரணமாய் இருக்க வேண்டும். பல்வேறு இடங்களில் முதலில் இவர்கள் ஆரம்பித்தது நூலகங்களைத்தான். உறுதியாக சொல்ல முடியும், இந்த பள்ளியையும், நூலகத்தையும் பயன்படுத்தி வளர்கின்ற மாணவர்கள், ஆழ்ந்த அறிவோடு வேறு தளத்தில் வளர்வார்கள். தமிழ் எழுத படிக்க தெரிந்தாலே கவிதைகளை கிறுக்குகின்ற இந்த தலைமுறையில் (என்னையும் சேர்த்துதான்) , ஆழமான அறிவுடைய தமிழ் அறிஞர்கள் உருவாக வாய்ப்பு இல்லாமல் இருக்கிறதே என்ற ஆதங்கம் உண்டு.  அந்த ஆதங்கத்தை போக்கும் இடமாக, “பாரதி, சுந்தர ராமசாமி, கல்கி போன்றவர்கள் உருவாகும் இடமாக  இங்குள்ள நூலகங்கள் இருக்கும். 
2 . Zero Waste Management 
குக்கூவில் குப்பைத்தொட்டி என்று ஏதும் கிடையாது. பிளாஸ்டிக் உபயோகத்தை பெரும்பாலும் தவிர்த்து விடுகிறார்கள். மற்ற எல்லா பொருட்களையும் மறு உபயோகப்படுத்த முயற்சிக்கிறார்கள். உணவு கழிவுகளை உரமாக மாற்றி கொள்கிறார்கள். சுரைக்காய் கூடும், குதிரையின் மண்டையோடும் அலங்காரமாய் தொங்குகின்றன. காலி பாட்டல்லோ, கண்ணாடி துண்டோ அவை அவற்றின் பிறவிப்பயனை இங்கு கண்டுகொள்கின்றன. சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் “இங்கே உள்ளே வரும் எந்த பொருளும் வீணாக போவதில்லை” 
3 . அமைவிடம். 
இயற்கை எழில் கொஞ்சும் ஜவ்வாது மலையடியில் இந்தப்பள்ளி அமைந்துள்ளது. சுற்றிலும் மலை மற்றும் காடுகள். நகரங்களில் தொலைத்த பல விஷயங்கள் இங்கு கிடைக்கின்றன. இரண்டு நாட்கள் இங்கு தங்கியிருந்தால் போதும், இயற்கையைபற்றிய நம்முடைய புரிதல் முற்றிலும் மாறிவிடும். 
4 . கல்வி முறை. 
எனக்கு இன்னும் அந்த கேள்வி மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது. “எட்டாம் வகுப்பில் நான் படித்த (a + b )2 பார்முலாவை , வாழ்க்கையில் நான் எங்கு உபயோகப்படுத்த போகிறேன்? ”  குக்கூவில் வாழ்க்கைக்கு தேவையானதை மாற்று வழி கல்வி மூலம் கற்று கொடுக்கிறார்கள். புத்தக வாசிப்பின் மூலம், மாணவர்களிடம் கற்று கொள்வதற்கான ஆர்வத்தை தூண்டுவது இவர்களின் முதல் குறிக்கோள். சமையல், வைத்தியம், நீச்சல், விவசாயம், நெசவு என வாழ்க்கைக்கு தேவையானதை சொல்லித்தர திட்டமிட்டுள்ளார்கள். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், “இந்தப்பள்ளி கிணற்றை காட்டி மாணவர்களை பயமுறுத்துவதில்லை. நீச்சல் கற்றுக்கொடுத்து கிணற்றோடு பந்தத்தை உருவாக்குகிறார்கள்”.
Inline image 3
குக்கூ யாருக்கானது?
குக்கூ இயக்கமானது குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் மட்டுமானதல்ல, அது கற்றுக்கொள்ளும் ஆர்வமுடைய எல்லோருக்குமானது. இயற்கையோடு வாழ விருபவர்களுக்கானது. 
குக்கூவை எவ்வாறு உபயோகப்படுத்திக்கொள்வது? 
ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம் என உங்களுடைய வசதிக்கேற்ப இங்கு வந்து தன்னார்வ தொண்டராக தங்கி கொள்ளலாம். உங்களுக்கு விருப்பமான வேலைகளை செய்து கொள்ளலாம். அல்லது, சும்மா இங்குள்ள நூலகங்களை பயன்படுத்தி கொள்ளலாம். எண்ணிக்கை அதிகமாக இருப்பின் முன்னரே சொல்லிவிட்டு செல்வது நலம். 
குக்கூ வை தொடர்பு கொள்ள, 
Call 9942118080,9994846491,9965689020 
ஈமெயில்: cuckoochildren@gmail.com
பின் குறிப்பு:
FB , Whatsup , தொல்லை இல்லாமல் இரண்டு நாள் குக்கூவில் தங்கி இருந்து திரும்பும் போது, வேறு உலகில் இருந்து திரும்புவது போல் இருந்தது. போனை ஆன் பண்ணியதும், முதலமைச்சர் ராஜினாமா, குழந்தை ஹாசினி கொலை என உலகம் பரபரப்பாக இருந்தது. இதை பார்த்ததும், “இந்த கோமாளித்தனமான சமூகத்திலிருந்து அடுத்த தலைமுறையை காப்பாற்ற வேண்டுமெனில், ஊருக்கு ஒரு குக்கூ பள்ளி தேவையென்று தோன்றியது”. 
Inline image 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *