Ainthinai-Tree Walk @ Theosophical Society, Feb 07 2016

Write up by Venkatesh
மரம் – இடை – நடை
உ .வெங்கடேஷ்

 

அடையாறு ஆற்றின் தென்பகுதியில் 260 ஏக்கரில் அமைந்துள்ளது இந்த Theosophical Society எனும் சொர்க்கபுரி . Theosophical Society 1875 – இல் Helena Petrovna Blavatsky என்பவரால் உலகளவில் சகோதரத்துவத்தை வளர்க்கவும், மனித சேவைக்காகவும் உருவாக்கப்பட்டது. இந்திய சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய Annie beasant அம்மையார் இதன் தலைவராக 1907 முதல் 1933 வரை செயல்பட்டார் .

 

சரி வரலாறு ஒரு புறம் இருக்கட்டும், அப்படி என்ன தான் இருக்கிறது இந்த Theosophical Society இல் ? எக்கச்சக்கமான மரங்கள். சரி மரங்கள் தானே ! அதிலென்ன அதிசயம் என்று கேட்பவருக்கு வியப்பு மட்டுமே விடையாக இருக்கும். உலகத்தின் பல்வேறு மூலைகளில் இருந்தும் பல நாடுகளிலிருந்தும்  பல ஆண்டுகளுக்கு முன் கொணர்ந்து விதைக்கப்பட்ட விதைகளும் , நடப்பட்ட மரங்களும் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து இந்த இடத்தை ஒரு சிறு வனமாக மாற்றியுள்ளன என்றால் அது மிகையாகது. செங்கதிர் உதிக்கும் அதிகாலை பொழுதில் தொட ங்கியது எங்கள் மரமிடை நடை (மரம் – இடை – நடை).  தமிழகத்தின் கிராமப்புறங்களிலும், ஊர்ப்புரங்களிலும் உள்ள  வயல் வெளி, காடு , மேடு , ஏரி , குளம் ,குட்டை என சுற்றித்திரிந்து, அலைந்து வளர்ந்து, பிழைப்பிற்காக தற்போது சென்னையே கதி என கிடக்கும் எனை போன்ற பலருக்கும் இங்கு  நடக்க தொடங்கி சில மணித்துளிகளுக்குள்ளாகவே ஞாபகம் வருதே , ஞாபகம் வருதே என பாடல் மனதுக்குள் ஓடத்துவங்கி இருக்கும் .

 

 

இந்த மரமிடை நடையை, சுவாரசியமான தகவல்களுடனும் , இலக்கியம் மற்றும் நம் கலாச்சாரம் , வரலாறு சார்ந்த  குறிப்புகளுடனும் நினைவில் அகலா நிகழ்வாக மாற்றியவர் மெட்ராஸ் கிருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் திரு. நரசிம்மன் அவர்கள் .

 

நடக்கத் தொடங்கி சில நிமிடங்களில் ஒரு பெரிய மரத்தின் அருகில் சென்று பேராசிரியர் ஒரு வினா எழுப்பினார். இந்த மரத்தை பாருங்கள் இதன் இலைகளை பாருங்கள் , இது அதை போல் உள்ளது? பலரும் ஒரு சேர வேப்ப மரத்தின் இலைகள் போல் உள்ளது  என்றனர் . அனால் இது வேப்ப மரமில்லை என்றும் இது அமெரிக்காவை சொந்த ஊராக கொண்ட மகாகோணி மரம் மற்றும் நம் ஊரின் வேப்ப மரத்திற்கு நெருங்கிய உறவினன் என்றார் பேராசிரியர். இந்த மரம் நெடுக வளர்ந்து பிரமாண்டமாக காட்சி அளித்தது .

 

சற்று தூரம் சென்றதும் நாம் அடுத்து பார்த்தது குல்முஹர் மரம் (செம்மயிர்க்கொன்றை).  இதன் அழகான செம்மலர்களை மே – ஜூலை மாதங்களில் சென்னையில் பல இடங்களில் நாம் பார்க்கலாம் . இந்த மரம் மடகாஸ்கர் தீவை தாயகமாக கொண்டது . இது முதன் முதலில் இந்தியாவில் கொல்கத்தாவில் உள்ள தாவரவியல் பூங்காவில் பயிரடப்பட்டது.  இங்கிருந்து பரவிய விதைகள் மூலம் தலைமுறைகள் தாண்டி தற்போது நம் ஊரில் பல இடங்களிலும் குல்முஹர் பரவியிருப்பதை பார்க்கலாம். ஒரு முக்கிய குறிப்பு , இந்த மரம் சென்னைக்கு உகந்த மரமல்ல, ஏன் தலைகனம் கொண்ட எவனும் ( எந்த மரமும் ) நம் ஊருக்கு உகந்தவன் அல்ல . இந்த மரத்தின் கிளைகள் அடர்ந்து வளர்ந்து இதன் தலையில் பாரம் சேர்த்து விடுகின்றன , இதன் காரணமாக மழை மற்றும் புயல் வரும் காலங்களில் பல குல்முஹர் மரங்கள் காற்றால் சாய்கப்பட்டு நமக்கு பொருளிழப்பும் , இடையூறும் ஏற்பட காரணமாகி விடுகின்றன .

 

 

பனை மரம் தமிழார் பண்பாட்டில் ஒரு முக்கியமான பங்கு என்று சொன்னால் அது மிகையாகாது . நம் ஊர்ப்புறங்களில் பல பனை மரங்கள் எரிக்கரைகளிலும் வெற்று நிலங்களிலும் காணப்படும் . இதன் நுங்கு சுவைக்கு மட்டுமன்றி பல மருத்துவ நற்குணங்களுக்கும் பெயர் போனது . இப்படி பட்ட பெருமை வாய்ந்த பனை மரங்களின் எண்ணிக்கை தமிழகத்தில்  வெகு வேகமா குறைந்து வருகின்றது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் .  இந்த பனை மரத்தின் உறவினர்கள் பலரையும் Theosophical Society – இல் கண்டோம் . இதில் என்னை குறிப்பாக மிகவும் கவர்ந்தது கூந்தல் பனை மற்றும் மீன் பனை .

 

IMG_20160207_090024471.jpg

 

அடுத்து நாம் பார்க்கப்போவது வாகை மரம். இந்த மரத்தின் தனிச்சிறப்பு என்னவெனில் இது தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக குறிஞ்சி பாட்டில் இடம் பெற்றுள்ளது. இது வெற்றியை குறிக்கும் மரமாக கருதப்படுகிறது . அதுமட்டுமல்லாது இதன் விதைகள் மருத்துவ குணம் படித்தவை . சித்த வைத்தியம் மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. வாகை மரத்தில் காய்கள் கொத்துகொத்தாக தொங்கும் . இவை காய்ந்த பிறகு காற்று வீசும் பொழுது சலசலவென சத்தத்தை ஏற்படுத்தும். இதன் காரணத்தால்,ஆங்கில மொழியில் வாகை மரத்திற்கு woman’s tongue என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது.

 

அடுத்து வருவது நாகலிங்கப்பூ. இந்த பூவை நம்மில் பலரும் பல கோவில்களில் பார்த்திருப்போம். அருமையான நறுமணம் கொண்டது. இந்த பூவின் பூர்வீகம் தென் அமெரிக்கா என்பது என்னை சற்றே வியக்க வைத்தது . ஆங்கிலேயர்கள் இந்த பூவை அலங்கார பொருளாக அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த பூவின் வடிவமைப்பு ஐந்து தலை நாகத்தின் கீழ் அமர்ந்துள்ள சிவலிங்கத்தை ஒத்து இருப்பதால் இதற்கு நாகலிங்கப்பூ என்று பெயரிட்டு இதனை நம் கலாச்சாரத்தில் இணைத்திருக்கிறோம். இந்த மரத்தின் ஆங்கில பெயர் என்ன தெரியுமா Canon balls tree. என்ன சிரிப்பு வருகிறதா? இந்த மரத்தின் காய்கள் பீரங்கி குண்டுகளை போன்று காணப்படும். பேராசிரியர் இங்கு சொன்ன, என் மனதில் நின்ற ஒரு குறிப்பு, ஒரு பூ அல்லது மரத்திற்கு பெயர் கொடுப்பதை வைத்து ஒரு கலாச்சாரத்தின் செயல்பாட்டை நாம் உணரலாம். மெய் சிலிர்க்கவைக்கும் உண்மை அல்லவா ? ஆங்கிலேயர்கள் காலனித்துவம் மூலம் போர் கலாச்சாரத்தில் மூழ்கி இருந்ததையும் நாம் ஆன்மீக சிந்தனையில் திளைத்ததையும் ஒரு மரத்தின் பெயர் நமக்கு உணர்த்தி விடுகிறது .

 

 

நம்மில் எத்தனை பேருக்கு பூவரச மரம் தெரியும் ? அதென்ன பெயர் பூவரசம்பூ? பூவுக்கெல்லாம் அரசனோ இவன்? இல்லை. இந்த மரத்தின் இலை  அரச மரத்தை போல இருப்பதாலும் , அரச மரத்தில் பூ பூக்காது இந்த மரத்தில் பூ பூப்பதாலும் இதற்கு இந்த பெயர் . அது சரி அரச மரத்திற்கு என் அரச மரம் என்று பெயர்?

 

 

எத்தனை மரங்கள் இருந்தாலும் ஆல மரம் போல் வருமா ? அதுவும் அடையார் ஆல மரம் போல் வருமா ? 90 – களில் வந்த புயலில் மரம் சாய்ந்தாலும் அதன் விழுதுகள் கம்பீரமாய் காட்சி அளிப்பது மனதை பூரிப்படைய செய்கிறது. இந்த மரத்தின் வயது சுமார் 450 ஆண்டுகள். மனிதனின் வாழ்கை எவ்வளவு சிறியது என்பதை இந்த ஆல மரம் நமக்கு சொல்லாமல் சொல்லி விடுகிறது. இருந்தும் மனிதன் தன்னை மட்டுமே முக்கியமாக கருதி மரங்களை வெட்டி சாய்ப்பதை நிறுத்த தான் போகிறானா, என்ன ?
IMG_20160207_075134599.jpg

 

கடைசியாக நான் குறிப்பிடப்போவது அலையாத்தித் தாவரங்கள், இதனை ஆங்கிலத்தில் Mangroves என்று குறிப்பிடுவர் . இவை சதுப்பு நிலப்பகுதிகளில் கரையை ஒட்டி வளரக்கூடியவை. நம்மை சுனாமி தாக்கிய போதும், நெடுமழை கொட்டி பெருவெள்ளம் சூழ்ந்த போதும் அடையார் மற்றும் beasant நகர் பகுதிகளில் வெள்ளம் வராமல் காத்த மரங்களில் அலையாத்தித் தாவரங்களின் பங்கு மிக முக்கியமானது. இந்த அலையாத்தித் தாவரங்களை Theosophical Society மட்டுமல்லாது அடையார் ஆற்றின் கரையை ஒட்டியுள்ள தொல்காப்பியர் பூங்காவிலும் காணலாம் . தொல்காப்பியர் பூங்கா தமிழக அரசால் மிகுந்த பொருட்செலவில் தொடங்கப்பட்ட இயற்கை ஆதாரங்களை மீட்டெடுக்கும் முயற்சி .

 

 

இந்த மரம் அறி நடையில் நான் கண்ட கற்ற விடயங்கள் பல. அதில் சில சுவாரசியமான தகவல்களை மட்டும் இங்கு பகிர்ந்துள்ளேன் . இந்த கட்டுரை  நான் பெற்ற இன்பத்தை இந்த உலகிற்கு வெளிப்படுத்த நான் எடுத்த ஒரு சிறு முயற்சி , குறிப்பாக concrete காடுகளில் ஒளிந்துள்ள மனிதர்களுக்கு நான் விடும் அறைகூவல். வெளியே வாருங்கள், இயற்கை அன்னை பல கைகளை நீட்டிக்கொண்டு நம்மை தழுவ காத்துக்கொண்டிருக்கிறாள் . மரங்களை வெட்டி அவள் கைகளை தயவுசெய்து துண்டிகாதீர்கள் . இதில் ஏதேனும் தவறுகள் இருப்பின் பிழை பொறுத்து மன்னிக்கவும். நன்றி
Inline image 1
படங்கள் : Google images மற்றும் சொந்த படங்கள்.

 

மேலும் தகவல்களுக்கு :

 

Regards

Team Ainthinai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *